×

காரகோ பாவ நாஸ்தி

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

திடத்தில் ஏராளமான விதிமுறைகளும் விதிவிலக்குகளும் உள்ளன. சில கிரகங்கள் சில பாவங்களில் அமரும்போது அந்த பாவம் கெட்டுப் போகிறது. இல்லாவிடில், அந்த பாவத்திற்கான உறவுகளால் அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. இதற்கு `காரகோ பாவ நாஸ்தி’ என்று பெயர்.

காரகம் என்பது என்ன?

காரகம் என்பது காரணம் என்ற வார்த்தையில் இருந்து வருகிறது. அதாவது ஓர் இடம் / உறவு / பொருளுக்கான காரணமான வஸ்து எதுவோ அதுவே காரகம் என்றாகிறது. இந்த ஒரு குறிப்பிட்ட கிரகத்திற்கோ அல்லது ராசி கட்டங்களில் உள்ள பாவத்திற்கோ அடையாளப்படுத்துவதாக சொல்லப்படுவதே காரகம்.

அதாவது, அந்த பாவத்துடனோ கிரகத்துடனோ தொடர்புடைய பொருள்படக்கூடிய மற்றொன்று காரகம். காரணமான அடையாளப்படுத்தப்படுவதே காரகம். சூரியனுக்கு தந்தை காரகம், சந்திரனுக்கு தாய் காரகம், செவ்வாய்க்கு சகோதரன் காரகம், புதனுக்கு மாமன் காரகம், குருவிற்கு ஆசிரியர் காரகம், சுக்கிரனுக்கு மனைவி காரகம், வேலையாட்களுக்கும் தொழிலுக்கும் சனி பகவான் காரகம்.

காரகோ பாவ நாஸ்தி என்றால் என்ன?

ஜோதிடத்தில் ஒரு தன்மைக்கான காரக கிரகம் அதே தன்மைக்கான பாவத்தில் அமரும் பொழுது அந்த தன்மை கெட்டுப் போகிறது. இதுவே காரகே பாவ நாஸ்தி ஆகும். இதில் சில விதி விலக்குகளும் உண்டு. இந்த விதிவிலக்குகள் பரிவர்த்தனை பெறும் பொழுதோ அல்லது ஆட்சி பெறும் போதோ அதிகம் பாதிக்கப்படுவதில்லை. நான்காம் பாவம் தாய்க்கு காரகமாக வருகிறது. அந்த பாவகத்தில் சந்திரன் இருப்பதால் அந்த உறவு தொடர்பான எதிர்பார்ப்புகள் கிடைப்பதில்லை.

காரகோ பாவ நாஸ்தி அமைப்புகள் என்ன?

பன்னிரெண்டு ராசி பாவக்கட்டங்களில் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒவ்வொரு தொடர்புகள் உண்டு. அதேபோல, அந்த தொடர்புகளுக்கான காரண கிரகங்களும் உண்டு. இந்த பாவக்கட்டங்களில் அதற்கு தொடர்புடைய காரண கிரகங்கள் அமரும் பொழுது அது கெட்டுப் போய்விடுகிறது. இதனையே ஜோதிட உலகம் காரகோ பாவ நாஸ்தி என்று விஸ்தரிக்கிறது.

ஐந்தாம் பாவம் புத்திர பாவம் என்று குறிப்பிடப்படுகிறது. அந்த புத்திரப் பாவத்தில் புத்திரக்காரக கிரகமாகிய குரு பகவான் அமையும் பொழுது ஜாதகருக்கு குழந்தை இருக்கும். அந்த குழந்தைகளால் அவர்களுக்கு எந்த லாபமும் இருக்காது. மேலும், வாழ்நாள் முழுதும் ஜாதகர்தான் குழந்தைகளுக்கு வளர்ந்து பெரியவர்கள் ஆனாலும் சம்பாதித்து கொடுக்க வேண்டிய நிலைமை உண்டாகிறது. ஏராளமான பிரச்னைகளும் துன்பங்களும் குழந்தைகளால் ஏற்படுவதால்தான் இதனை ‘காரகோ பாவ நாஸ்தி’ என்கின்றனர்.

நான்காம் பாவத்திற்குரிய உயிர் காரகமாக தாய் வருகிறார். அந்த பாவத்தில் சந்திரன் அமர்ந்திருந்தால் அல்லது பரிவர்த்தனை பெற்றிருந்தால் அந்த பாவம் சார்ந்த பிரச்னைகளை தாயின் மூலம் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டும். எல்லாம் இருந்தும் ஹோட்டலில் உண்ணக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். அந்த பாவம் சார்ந்த எந்த எதிர்பார்ப்பையும் ஜாதகர் வைத்துக் கொள்ள முடியாது. இதுவும் ‘காரகோ பாவ நாஸ்தி’ எனலாம்.

நான்காம் பாவத்திற்குரிய மற்றொரு காரகம் வீடு. இதே நான்காம் பாவத்தில் செவ்வாய் இருந்தாலும் அல்லது செவ்வாய் பார்த்தாலும் நிறைய நிலபுலன்கள் இருக்கும். அவை இருந்தாலும் பயனற்றதாகவே இருக்கும். இல்லாவிடில் ஜாதகர் நிறைய வீடுகள் இருந்தும் வாடகை வீட்டிலே குடியிருக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுகின்றது. இதுவும் ‘காரகோ பாவ நாஸ்தி’ எனலாம். நான்காம் பாவத்திற்குரிய மற்ெறாரு காரகம் வாகனம். இந்த நான்காம் பாவத்தில் சுக்கிரன் அமர்ந்திருந்தால், வாகனத்தை சுத்தமாக வைத்திருக்க மாட்டார்கள். வாகனத்தை இவர்களுக்கு சரியாக நிர்வகிக்க தெரியாது. வாகனத்திற்காக செலவு செய்து கொண்டே இருப்பார்கள்.

ஏழாம் பாவத்தினை களத்திரம் என்று சொல்வார்கள். ஆண் என்றால் மனைவி. பெண் என்றால் கணவன். ஆண் ஜாதகருக்கு ஏழாம் பாவத்தில் சுக்கிரன் தனித்து இருந்தால், மனைவி இருந்தும் எந்தப் பயனும் இல்லை. அதே போல, பெண் ஜாதகருக்கு ஏழாம் பாவத்தில் செவ்வாய் பார்த்தாலும் இருந்தாலும் கணவன் இருந்தும் எந்தப் பயனும் இல்லை. மனைவிக்கு தேவையானதை செய்யாமல் கணவன் இருக்கிறான். இதுவும் ‘காரகோ பாவ நாஸ்தி’ எனலாம்.

மூன்றாம் பாவகம் என்பது சகோதரத்தை சொல்லக்கூடியது. சிலருக்கு மூன்றாம் பாவத்தில் செவ்வாய் அமர்ந்தால் சகோதர, சகோதரி வழியாக மிகுந்த பிரச்னைகளை சந்திக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். சகோதரர்கள் இந்த ஜாதகருக்கு வாழ்நாள் முழுதும் தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பர். இதுவும் ‘காரகோ பாவ நாஸ்தி’ எனலாம்.

பதினோராம் பாவத்தில் சிலருக்கு செவ்வாய் அமரும் பட்சத்தில் ஜாதகர் வளர்ந்து வரும் காலத்தில் ஜாதகரின் மூத்த சகோதரம் பாதிக்கப்படுகிறது. இதுவும் ‘காரகோ பாவ நாஸ்தி’ எனலாம். காரகோ பாவ நாஸ்தியில் ஒரு குறிப்பிட்ட பாவத்தில் உள்ள காரக கிரகம் பாதிப்படையச் செய்யும் என்ற விதிமுறைகளில் சில விதிவிலக்குகளும் உண்டு. ஆட்சி பெற்றிருந்தாலோ, உச்சம் பெற்றிருந்தாலோ, பரிவர்த்தனை அடைந்திருந்தாலோ பாவம் பாதிப்படையச் செய்யாது.

யார் அதிக கருமியாக இருப்பார்?

கருமி என்பவர் செலவே செய்யாமல் இருப்பவர். அதாவது 12ம் பாவம் பாதிக்கப்பட்ட அமைப்பாக இருக்கும். இந்த 12ம் பாவத்தில் சனி அமர்ந்தாலோ அல்லது 12ம் பாவத்தை சனி பார்த்தாலோ செலவு செய்வதற்கு தயக்கம் காட்டுவார். இதனால் இவருக்கு தூக்கம் கெடும். சிலருக்கு குடும்ப ஸ்தானம் என சொல்லக்கூடிய தனஸ்தானம் கெட்டு போக வாய்ப்புள்ளது. 12ம் பாவத்தில் சனி உள்ளவர்கள் தானம் செய்தால் வாழ்வில் நற்சிறப்புகள் உண்டாகும்.

The post காரகோ பாவ நாஸ்தி appeared first on Dinakaran.

Tags : Karako ,Sivaganesan ,
× RELATED ருசக யோகம்